Tag Archives: uranium

இந்தியாவில் தொழில் செய்வது தான் எத்தனை கடினம்??

அனைத்து அனுமதிகளையும் பெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்று வந்த தாது மணல் தொழில் சில நிழல் உலக அரசால் கபளிகரம் செய்வதற்காக பொய்யான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தப்பட்டு பலமுனை தாக்குதலுக்கு அதில் ஊடகங்களும் பயன்படுத்தப்பட்டன. வேண்டும் என்றே உண்மை தெரிந்து சில ஊடகங்களும், உண்மை தெரியாமல் நல்லெண்ணத்தில் சில ஊடகங்களும் இந்த தொழிலுக்கு எதிராக எழுதி வருகின்றன. எல்லாம் நீதித்துறை அச்சப்படுத்துவதற்கு ஒரு நடவடிக்கை. அரசின் வேண்டுகோள் படி அறிக்கை கொடுத்த அதிகாரிகளும் ஒரு படத்தை 64 துண்டுகளாக மாற்றி பசில் என சரி செய்ய கொடுப்பது போல் அதிகாரிகளையும் வழக்கறிஞர்களையும் குழப்புவதற்காக அறிக்கைகளை வேண்டும் என்றே சரியாக கொடுக்கவில்லை. இதில் முக்கியம் இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் ஏற்றுமதி கனிமங்களில் தான் மோனசைட் அளவுக்கு அதிகமாக இருந்தது என்ற விபரத்தை வேண்டும் என்றே அதிகாரிகள் மறைத்து விட்டு சில இனங்களில்; கூடுதல் கொடுத்து விட்டார்கள். இதன் அடிப்படையில் இந்து தமிழ் பத்திரிக்கையில் 22.5.18 ஒரு செய்தி மிகைப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது. அதற்கு நம் தொழிலாளர் சங்கம் சார்பாக ஒரு பதில் அனுப்பப் பட்டுள்ளது. இது இந்து நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தால் நிச்சயம் இதில் நல்ல முடிவு எடுப்பார்கள். எனவே நமது சங்கத்தில் இருந்து இந்து பத்திரிக்கையின் இயக்குனர்களை சந்திக்க கால ஒதுக்கி தரவும் கேட்க முடிவு செய்துள்ளோம். அந்த பத்திரிக்கைக்கு அனுப்பிய பதில் அனைத்து உறுப்பினர்களும் தெரிந்;து கொள்ள கீழே வெளியிடப் பட்டுள்ளது.

***********

From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2018-05-23 10:28 GMT+05:30
Subject: Clarification regarding “குவித்து வைக்கப்பட்ட தாது மணலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட்”

To: flcomments@thehindu.co.in, flletters@thehindu.co.in, flnsub@thehindu.co.in, inetads@thehindu.co.in

அன்புடையீர்,

தங்களது 22.5.18 தேதிய பத்திரிக்கையில் “குவித்து வைக்கப்பட்ட தாது மணலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.  இதன் தொடர்ச்சியாக எங்கள் விளக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் மேற்கண்ட அறிக்கையை முழுவதும் படிக்காமல் இந்த கட்டுரையை எழுதி உள்ளீர்கள் என்பதையும் விருவிரு செய்தி கொடுக்க வேண்டும் என்று மிகைப்படுத்தி எழுதி உள்ளதையும் தெரிய முடிகிறது. ஒருவேளை இந்த கட்டுரைதாரரில் யாராவது திருமதி சந்தியா ரவிசங்கரின் கூட்டாளியாகவோ அல்லது பங்குதாரராகவோ இருக்கலாம். அதுவும் இந்த கட்டுரை உண்மைக்கு புறம்பாக வருவதற்கு காரணம்.
முதலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட் என்பது தாது மணலில் மட்டும் கிடைப்பது அல்ல. அது ஆற்று மணலிலும் கிடைக்கும். பெரும் பகுதியாக கிடைப்பது இரும்பு தாது சுரங்கத்திலும், சுண்ணாம்பு தாது சுரங்கத்திலும் தான். ஆனால் அவற்றிற்கு பணத்திற்காக புகார் எழுதும் பொய்யர் கூட்டம் இல்லாததால் அதை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. மாறாக குடும்ப பகை, தொழில் போட்டி, மாமூல் தரவில்லை என்ற கோபம், விளம்பரம் தரவில்லை என்ற கோபம் ஆகியவற்றிற்காக மிகைப்படுத்தி இவை எழுதப்படுகின்றன.
இது போக இதில் அன்னிய சக்திகளின் கையும் உண்டு. இந்திய உற்பத்தியாளர்களால் தங்களது ஏகபோக வாணிபம் தடை பட்டதை சகித்து கொள்ள முடியாத அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் சில கைக்கூலிகளை கையில் வைத்து தவறாக எழுதுகின்றன.
முதலாவதாக மோனசைட்டில் கிடைக்கும் தோரியம் மற்றும் யுரேனியம் பிளவு படக் கூடியது அல்ல. எனவே அவற்றை எந்த வகைக்கும் உபயோகிக்க முடியாது. உலகத்தில் எந்த நாட்டிலும் மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியத்தை வைத்து எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தியாவில் இதனை பிளவு பட வைக்க  முடியுமா என்பதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. 2080-ல் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறார்கள். எப்படி கடல் நீரில் இருந்து  பெட்ரோல் தயாரிக்க ஆராய்ச்சி சென்று கொண்டு இருக்கிறதோ அது போல் இது ஒரு ஆராய்ச்சி.
இந்த மோனசைட் கனிமம் இதர கனிமங்களோடு கலந்து இருந்தால் இதர கனிமங்களுமே உபயோகத்திற்கு லாயக்கற்றதாகி விடும். உலக நாடுகளில் மோனசைட் கனிமம் கட்டுப்பாடு எதுவும் இன்றி விலை மலிவாக கிடைப்பதால் அந்நிய நாடுகள் இந்த மோனசைட்டில் இருந்து ரேர் எர்த் தயாரிப்பதற்கு இந்தியாவிடம் கொள்முதல் செய்வதை 2004-லேயே நிறுத்தி விட்டார்கள். இதனை இந்திய பாராளுமன்றத்தில் வினா எண் 420-க்கு பதிலில் மத்திய அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
தாங்கள் கிடங்குகளில் ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டுள்ள மணலில் மோனசைட் கனிமம் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் அது இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் சரக்கு என்பதை வேண்டும் என்று மறந்தீர்களோ அல்லது தெரியாமல் விட்டீர்களோ தெரியாது. உங்கள் கவனத்திற்கு கீழ்கண்டவற்றையும் கொண்டு வர விழைகிறேன்.
மோனசைட் என்பது இயற்கையாக கிடைக்கும் ஒரு கனிமம். இதில் இத்தனை சதவீதம், அத்தனை சதவீதம் என்று எந்த கட்டுப்பாடும் கிடையாது. தங்கள் பார்வைக்கு அணுசக்தி துறையின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மோனசைட் கனிமம் ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற ஒரு எண்ணத்தை நீதித்துறையில் ஏற்படுத்துவதற்காக இந்த திட்டமிட்ட செய்திகள் பரப்பபடுகின்றன. உண்மையில் எல்லா துறைமுகங்களும் விமான நிலையத்தில் உள்ளது போல் லாரியோடு செல்லும் சரக்குகளை ஆய்வு செய்ய ஸ்கேனர் வசதி பொறுத்தப்பட்டுள்ளது. எனவே அவற்றின் வழியாக மோனசைட்டோ அல்லது எந்த கதிரியக்க பொருளுமோ கொண்டு செல்லவோ இறக்குமதி செய்யவோ முடியாது. நாளது தேதி வரை இவ்வாறு எந்த கதிரியக்க பொருளும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்ற விபரத்தை நீங்கள்  http://www.beachminerals.org/tuticorin-port-trust-has-scanner-to-find-out-radioactive-materials-uranium-thorium-monazite-or-other-unwanted-materials-used-for-export-until-now-no-such-materials-found-in-the-export-cargo-tutico/  ல் காணலாம்.
தாங்கள் மற்றும் திருமதி சந்தியா ரவிசங்கர் ஆகியோர் முழுவதும் விவி மினரல் நிறுவனத்தையும் வைகுண்டராஜனையும் குறி வைத்து தாக்குவதை வழக்கமாக கொண்டவர்கள்.
தாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக கூறி உள்ளீர்கள். எது அனுமதிக்கப்பட்ட அளவு? அதற்கான அரசாணை அல்லது அறிவிக்கை எங்கே உள்ளது?
தாங்கள் திருவம்பலாபுரத்தில் மோனசைட் இருப்பு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். உண்மை. அவை இதர கனிமங்களை பிரித்த பிறகு அணுசக்தி  துறை  நிபந்தனை படி தனியாக பாதுகாத்து வைக்கப்பட்டு அணுசக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சரால் பதிலாக question No. 2654  தெரியப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் அதனை தெரிவித்தால் பெரிய குற்றச்சாட்டாக பதிய முடியாது என்பதற்காக தாங்கள் அதனை விட்டிருக்கலாம்.
இப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மோனசைட் இருக்கும் பகுதிகள் எந்த தனியாருக்கும் குத்தகை வழங்கப்படுவது இல்லை. தனியாருக்கு குத்தகை வழங்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும் குறைந்த அளவு மோனசைட் உள்ள பகுதிகள் ஆகும்.
எனவே எந்த இடத்திலும் கதிர்வீச்சை கக்கும் மோனசைட் குவித்து வைக்கப்படுவதில்லை. மாறாக பாதுகாப்பாக பாதுகாத்து வைத்துள்ளார்கள். திருவம்பலாபுரத்திலும் 23461 மெட்ரிக் டன் வைத்திருப்பதாக நிறுவனம் சொல்ல ஆனால் 23608 மெட்ரிக் டன் மோனசைட் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தால் நிறுவனம் தவறு செய்யவில்லை என்று தானே அர்த்தம். அதனை நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாமே..
மத்திய அணுசக்தி துறை அதிகாரிகள் உங்களிடம் கூறினார்கள் என கூறி உள்ளீர்களே.. அவர்கள் இந்த மோனசைட் இருப்பு வைக்கும் போது கதிர்வீச்சு வராமல் இருக்க மேலே இரண்டு மீட்டர் கழிவு மணல் கொட்ட வேண்டும் என்ற விதி இருப்பதை அவர்களாக விட்டார்களா அல்;லது நீங்களாக விட்டீர்களா தெரியாது. அவ்வாறு உள்ள கழிவு மணலையும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக அறிக்கையில் காட்ட வேண்டும் என்று சில அதிகாரிகளின் வற்புறுத்தலால் காட்டி இருக்கலாம். ஆனால் இது பற்றி சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யும்.
ஒரு பொறுப்பு உள்ள பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வந்து உள்ள இந்து போன்ற ஒரு பத்திரிக்கை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு இனத்தை கையில் எடுத்து நீதித்துறையை அச்சுறுத்துவதற்கு இவ்வாறு செய்தி வெளியிட்டது வருந்ததக்கதே!!. இந்த செய்தியை வெளியிட இந்தியாவில் உள்ள தலைசிறந்த பத்திரிக்கை ஜாம்பவான் ஆன திரு.ராம் மற்றும் திருமதி மாலினி பார்த்தசாரதி போன்றவர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் விந்தையாக உள்ளது.
தயவு செய்து இந்த விளக்கத்தை உங்கள் பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆர்.பாலகிருஷ்ணன்
தலைவர்

தாது மணலில் அணு கனிமம் – கதிரியக்கம் என்ற அபாண்ட குற்றச்சாட்டு- உண்மை நிலை

அன்னிய சக்திகள் இந்திய தாது மணல் உற்பத்தியாளர்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் சதி திட்டம் செய்து அவர்களுக்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டுகளை பெரும் செலவு செய்து கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். விளைவு இதனால் இந்திய அரசுக்கு பெறுத்த நட்டம். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, தாது மணல் கனிமங்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டும், கடலில் இழுத்து செல்லப்பட்டும் வீணாகின்றன. மேலும் கடல் உள்ளே இழுத்து செல்லப்படும் கனிமங்கள் பக்கத்து நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் இந்தியாவின் கடல் வளம் இந்திய மீனவர்களுக்கு மீன் படி உரிமையை மறுக்கும் இலங்கையால் அனுபவிக்கப்படுகிறது.

அதிகாரிகளையும் நீதித்துறையையும் மிரட்டுவதற்கு மிகப் பெரிய குற்றச்சாட்டான கதிரிக்கம் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் கதிரியக்கத்திற்கும் தாது மணல் குவாரி அல்லது சுத்தப்படுத்துதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாது மணல் குவாரி செய்யும் போது அரை சதவீதத்திற்கும் குறைவாக மோனசைட் என்னும் ஒரு கனிமம் கிடைக்கும். இந்த மோனசைட் சாதாரண மணலிலும், கல்லிலும், கிரானைட் உட்பட பூமியின் எல்லா பகுதியிலும் இயற்கையாகவே கிடைக்கும். அதுவும் சாதாரண மணல் மற்றும், கல், கிரானைட் பாறை முதலியவற்றில் கிடைப்பவை தாது மணலில் கிடைப்பதை விட கூடுதலான அளவு. இதனால் எந்த பாதிப்பும் யாருக்கும் கிடையாது. இதனால் பாதிக்கப் பட்டதாக கூறுவது எல்லாம் இட்டு கட்டிய கதை. உலகிலேயே அதிகமான மோனசைட் கிடைக்கும் இடம் மணவாளக்குறிச்சி. அங்கு இந்திய அரசு நிறுவனம் தான் குவாரி செய்து வருகிறது. அந்த பஞ்சாயத்து முழுவதும் மீனவர்கள் நிறைந்த பஞ்சாயத்து. மீனவ சமுதாய பெண் ஒருவர் தான் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்த உலகிலேயே அதிக மோனசைட் உள்ள மணவாளக்குறிச்சியில் தான் மோனசைட்டையும் குவாரி செய்து பிரித்து எடுக்கிறார்கள். அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கடந்த 50 வருடங்களாக தலைமுறை தலைமுறையாக அங்கு வசதியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுவதை கேட்கலாம் ( )

இத்தொழிலில்; ஈடுபட்டுள்ள எந்த தொழிலாளியோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ அல்லது இந்த தொழிற்சாலைகளை ஒட்டி உள்ள மக்களோ கதிர்வீச்சு நோய் எதிலும் பாதிக்கப்படவில்லை. மாறாக இதனை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த ஊரில் ஒருவருக்கு இந்த நோய், இந்த ஊரில் ஒருவருக்கு அந்த நோய் என இட்டு கட்டி எழுதுவார்கள். எந்த ஊரில் தான் யாருக்கு நோய் இல்லை. உலகம் முழுவதும் கேன்சர் உள்ளது. உலகம் முழுவதும் சிறுநீரக பாதிப்பு உள்ளது. இது சிறுவயதில் பள்ளிக்கு செல்வதற்கு தலைவலி, வயிற்று வலி என்ற ஆசிரியரால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தை கூறி பள்ளியை ஏமாற்றுவது போன்றது. இருப்பினும் தொழிளாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கதிரியக்கம் என்ற பொய் பிரச்சாரம் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக இருதயம் என்னும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த விஞ்ஞானி “நான் இந்தியன்” என்ற பெயரில் கதிரிக்கம் பற்றி பதிவு செய்துள்ளவைகளை கீழே பதிவிட்டுள்ளோம்.

கதிரியக்கம் என்றால் என்ன – ஒரு அறிவியல் பார்வை

கதிரியக்கம் ( Radiation )  என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள்.   சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது ,  எல்லாரும் கதிரியக்கம் என்ற Radiation யை குறித்து மிகவும் பயந்து பேசினார்கள்.   என்னுடைய முறை வந்தபோது நான் பொதுவாக அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டேன் .
கதிரியக்கம் ( Radiation )  என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள் ?    அவர்கள் அளித்த பல பதில்களை பார்த்து நான் கொஞ்சம் வியந்துதான் போனேன்.  ஏன் எனில் ஒருவர் சொன்னார் Radiation என்பது விஷம்என்றார் ( அவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார்) .  இன்னும் ஒருவர் சொன்னார் Radiation என்பது ஒரு வாயு ( Gas ) , அது மக்களை கொல்லும் சக்தி படைத்தது என்று.    அன்று தீர்மானித்தேன் இந்த radiation என்ற கதிரியக்கத்தை குறித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று.   புரிந்து கொள்ளுவதற்கு கொஞ்சம் கடினமான பகுதி என்றாலும் , எளிதில் விளங்ககூடிய அளவில் இந்த கட்டுரையை எழுத நான் யாசிக்கிறேன்
Radiation  அல்லது கதிரியக்கம் என்றால் என்ன ?
இயற்பியலின் படி கதிரியக்கம் என்பது ஒரு ஊடகம் அல்லது பரந்த வெளியாக செல்லும் ஆற்றல் அல்லது அலைகள் அல்லது சக்திமிகுந்த சிறு துகள்கள் என்று வரையறுக்கபடுகிறது.
இந்த கதிரியக்கம் அயனியாக்க  ( Ionizing )  மற்றும் அயனியாக்கம் அல்லாத ( Non Ionizin ) என்று இரு வகைப்படும்.
இதில் அயனியாக்க கதிரியக்கம் ( Ionizing  Radiation )  என்பதை குறித்த அச்சமே நிலவுவதால் அதை குறித்தே இந்த கட்டுரையில் எழுத அதிகம் கவனம் கொண்டுள்ளேன்.   இந்த வகையில் கீழ்க்கண்ட கதிரியக்கங்கள் வருகிறது…
1 .   ஆல்பா கதிர்கள்  ( Alpha Rays )
2     பீட்டா  கதிர்கள்  ( Beta Rays )
3     காமா கதிர்கள் ( Gamma Rays )
4     நியூட்ரான்  கதிர்கள் ( Neutraan Rays )
5     X  கதிர்கள்   ( X  Rays  )
6     காஸ்மிக் கதிர்கள் ( Cosmic Rays )
இந்த கதிர்கள் ஊடுருவி செல்லும் சக்தி படைத்ததால் மனுக்குலத்திற்கு தீங்கு விளைவிக்கவும் இவைகளால் முடியும் என்ற என் கருத்தை நண்பர்கள் ஏற்று கொண்டவுடன் என்னை பார்த்து கேட்ட கேள்வி என்ன தெரியுமா ? 
அதனால் தான் சொல்லுகிறோம் அணு மின் நிலையங்கள் வேண்டாம் என்று  .
நான் அவர்களிடம் கேட்டேன் கதிர்வீச்சின் பிறப்பிடமே அணுமின் நிலையங்கள் தான் என்று நினைக்கிறீர்களா ?
உடனே கோரசாக பதில் வந்தது ” ஆம் என்று “
இந்த கதிரியக்கங்கள் பெருமளவு இயற்கையாகவும் ,  கொஞ்சம் செயற்கையில் இருந்தும் மனிதனுக்கு கிடைக்கிறது.   என்ற என் பதிலுக்கு ஒரு சேர வியப்பும் ,  எதிர்ப்புகளும் எழும்பியதால் இன்னும் கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன்.
Radiation அல்லது கதிரியக்கம் என்பது  சிவேர்ட் ( Sievert ) என்ற அலகினால் அளக்கப்படுகிறது.   அதனுடைய பழைய அளவு ரெம் ( Rem ) என்ற அலகினால் அளக்கப்பட்டது.   இந்த அலகுகளின் மாற்றம் குறித்து கீழே காணுங்கள்
1  ரெம் (Rem)                     =   0 .01   சிவேர்ட்                   =      10  மில்லி சிவேர்ட்
1 எம்ரெம் (mrem )           =   0 .01  மில்லி  சிவேர்ட்   =      10   மைக்ரோ சிவேர்ட்
1  சிவேர்ட்                         =   100  ரெம்
1  மில்லி சிவேர்ட்        =   100  mrem                              =     0.1  ரெம்
1  மைக்ரோ சிவேர்ட் =  0.1  mrem

(நன்றி :  http://en.wikipedia.org/wiki/Sievert )

மனிதன் பெறுகின்ற கதிரியக்கத்தில் பெருமளவு , அதாவது 81 % இயற்கையில் இருந்து பெறுகிறான்.   அந்த 81 சதவீதம் இப்படி பிரிக்க படுகிறது.   இயற்கையாக பூமியின் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள ராடான் 55 % ,   இயற்கையாக கடல் , மண்  , தாது பொருட்கள் இவற்றில் இருந்து 15  சதவீதம் மற்றும்  இயற்கையாக மனிதன் உடலுக்குள் ( Tritium  , Carbon – 14  , மற்றும் பொட்டாசியம் – 40  )  11  சதவீதம் .  இது அநேகம் பேருக்கு ஆச்சரியமாக தான் இருக்கும் என்பதி சந்தேகம் இல்லை .
மீதம் 19  சதவீத கதிரியக்கத்தை மனிதன் செயற்கை மூலமாக பெறுகிறான் .  அதாவது மருத்துவ சேவைகளினால் 15  சதவீதமும் ,  நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினால் ( டிவி , கம்ப்யூட்டர் , மற்றும் பல )  3  சதவீதமும்  , மீதம் 1  சதவீதம்  அணு மின் நிலையங்கள்  , ஆகாய விமான பிரயாணங்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கிறது என்பது நமது எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்குகிறது அல்லவா .?
இப்பொழுது யாரோ ஒருவர் கேட்கிறார்கள் மருத்துவ துரையின் மூலமாக கதிரியக்கம் நமக்கு கிடைக்குமா ..?  எப்படி இதை நம்ப முடியும் என்று ..?   நம்புங்கள் .. சில ஆதாரங்களை தருகிறேன் ..
மார்பக எக்ஸ்ரே    (  14   x   17   இன்ச் )                  =    15  mrem
பல் எக்ஸ்ரே  ( 3  இன்ச் சுற்றளவு )                      =    300 mrem
முதுகு தண்டு எக்ஸ்ரே ( 14   x   17   இன்ச் )     =    300 mrem
thyroid uptake study                                                             =   28000  mrem
Thyroid  Oblation                                                                  =   18000000  mrem
ஒரு நாளைக்கு நீங்கள் 20  சிகரெட் புகைப்பீர்கள் ஆனால் 280 mrem  /  day கதிரியக்கத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்றபொழுது அநேகரின் முகத்தில் ஈயாடவில்லை.
ஒரு முறை 30000  அடி உயரத்தில் பறக்கும் ஒருவர் , தன் ஆயுள் காலம் முழுவதும் அணுமின் நிலையத்தில் வேலைபார்க்கும் ஒரு தொழிலாளியை விட கதிரியக்கத்தை அதிகமாக பெறுகிறார் ( நன்றி  : The Upside Down , Book of Nuclear Power  , Page No : 148  , Written by . Mr  Jha )
நாம் எல்லாரும் கையில் வைத்திருக்கும் அலைபேசிகளின் கதிரியக்கமும் ,  அவற்றிக்கு பயன்படும் அலைபேசி கோபுரங்களும் கதிரியக்கத்தை தாராளமாக நமக்கு தருகின்றன ( கொஞ்சம் http://www.ciol.com/Networking/News-Reports/Mobile-tower-radiation-fear-grips-Delhi/137567/0/ படியுங்களேன் )
முடிவுரை :   இன்னும் இவைகளை குறித்து எழுத வேண்டுமெனில் ஏராளம் இருக்கிறது  ,  ஆனாலும் 99  சதவீத கதிரியக்கத்தை நாம் தாராளமாக ஏற்று கொண்டு உள்ளோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்றபோது என் நண்பர்கள் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலைகளை அசைத்தார்கள்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆக்கப்பூர்வமான் கேள்விகளை தொடுக்கலாமே ..   நாம் விவாதிப்போம் …  நன்றி