ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் மேற்கண்ட தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியானது. அது சற்று மிகைப்படுத்தி எழுதப் பட்டு இருந்தது. மேலும் உயர்நீதிமன்றம் மத்திய அரசு துறைகளுக்கு கவுண்டர் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிட்டதை வி.வி.மினரலுக்கும் எதிராக என குறிப்பிட்டு செய்தி வெளியிடப் பட்டுள்ளது. இந்து தமிழ், தினகரன் இரண்டு நாளிதழ்கள் தான் வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடும். ஆனால் ஜீனியர் விகடன் பத்திரிக்கையிலும் இந்த செய்தி வந்துள்ளது. எனவே உண்மை நிலவரத்தை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என இன்று 25.03.2015 அன்று மின் அஞ்சல் மற்றும் தபால் மூலம் மேற்கண்ட மறுப்பு அனுப்பப் பட்டுள்ளது.
****************
பெறுநர்
உயர்திரு. ஆசிரியர் அவர்கள்,
ஜீனியர் விகடன்,
சென்னை.
அன்புடையீர்,
கிரானைட் அடுத்து கார்னட் என்ற தலைப்பில் பகீர் கிளப்பும் மணல் வழக்கு எண் ஜோ.ஸ்டாலின் என்பவர் பெயரில் வெளியான செய்தியின் தொடர்ச்சியாக இந்த மறுப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் தாது மணல் அதிபர் சங்க தலைவர் தயாதேவதாஸ் என குறிப்பிட்டுள்ளதற்கு எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன். அவர் மேற்படி சங்க தலைவர் அல்ல. மாறாக பெடரேசன் ஆப் இந்தியன் பிளேசர் மினரல் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஒரு கம்பெனியை பதிவு செய்து அதை ஒரு பெடரேசன் என நம்ப செய்து தலைவர் என அவருக்கு அவரே பெயர் சூட்டிக் கொண்டார். இதில் உள்ள ஒரே குத்தகைதாரர் திரு.தயாதேவதாஸ் மட்டுமே.
தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் தவிர இதர அனைத்து தனியார் நிறுவனங்களும் சேர்ந்து வைத்துள்ள அமைப்பு “பீச் மினரல் புரொட்யூசர்ஸ் அசோசியேசன்” (Beach Mineral Producers Association ) ஆகும். அதற்கு என தனியாகwww.beachminerals.org என்ற இணையதளம் உள்ளது.
தாங்கள் குறிப்பிடும் விக்டர் ராஜமாணிக்கம் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர். வழக்கம் போல் எல்லா கம்பெனிகளும் ஓய்வு பெற்ற அலுவலர்களை பணி நியமிப்பது போல் இவரும் திரு.தயாதேவதாசிடம் பணியாற்றுகிறார். இவர் மற்றும் சுந்தரம் மற்றும் தேவசகாயம் போன்றோர்களுக்கு வேலை மீடியாக்களுக்கு வி.வி.மினரலுக்கு எதிரான தவறான தகவலை கொடுத்து மீடியாக்களையும் அரசையும் நீதிமன்றத்தையும் வி.வி.மினரலுக்கு எதிராக திருப்புவது தான்.
இவர்கள் அனைவரையும் இயக்குவது திரு.தயாதேவதாஸ் தான். இதனை தாங்கள் மேற்சொன்ன இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அதே இணையதளத்தில் ஏராளமான அரசு ஆய்வு அறிக்கைகள் உள்ளன. இவற்றை பார்த்தும் இந்த புகார்கள் உள்நோக்கத்தோடு எழுதப் பட்டவை என தெரிந்து கொள்ளலாம்.
தாங்கள் ஒரு கேள்வி கேட்கலாம். அப்படியானால் சிறப்பு குழு விசாரணையை எதிர் கொள்ள என்ன தயக்கம் என்று?
நேர்மையான எந்த விசாரணையையும் யாரும் எதிர் கொள்ளமுடியும். ஆனால் உள்நோக்கத்தோடு உள்ள ஒரு விசாரணையை எப்படி எதிர் கொள்ளமுடியும்.?
முன்பு திமுக ஆட்சி இருக்கும் போது தலைமையின் சொல்படி அப்போது சேரன்மகாதேவி சப்கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடி, வி.வி.மினரல் நிறுவனத்தை தொந்தரவு செய்தார். தொந்தரவு பொறுக்க முடியாத நிலையில் அவர் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப் பட்டது மற்றும் மனித உரிமை ஆணையத்திலும் புகார் மனு தாக்கல் செய்யப் பட்டது.
இதை கோபமாக வைத்து கன்னியாகுமரி கலெக்டராக அவர் இருக்கும் போது வி.வி.மினரல் அவர்கள் சொந்த நிலத்தில் சமர்பித்த விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய மறுத்தார். உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப் பட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு தான் விண்ணப்பமே சென்னைக்கு அனுப்பப் பட்டது. இவ்வளவு விரோதம் உள்ள ஒரு நபரிடம் தற்போது விசாரணை கொடுக்கப் பட்டால் முடிவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா?
இவர்கள் சிறப்பு குழு விசாரணை என கேட்பதற்கும் ஒரு பின்னணி உண்டு. சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான “ரியோடின்டோ” திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் சேர்த்து ஒரு விண்ணப்பம் சமர்பித்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் போட்டியாக இருப்பது வி.வி.மினரல் நிறுவனம் தான்.
அவர்கள் இந்தியாவின் பொருள் தரம் குறைந்தது என விளம்பரம் செய்து பார்த்தார்கள். ஆனால் சர்வதேச நிறுவனத்தை விட வி.வி.மினரல் பொருள் தரம் குறைந்தது அல்ல என்பதை பல்வேறு ஆய்வகங்களில் ஆய்வு செய்து ஒப்புதல் பெற்று இதன் மூலம் அமெரிக்கா முதல் சவுதி அரேபியா வரை எல்லா முன்னணி நாடுகளிலும் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் ஒரு சிறப்பு கலாச்சாரம் உண்டு. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருள் குழந்தை தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறதோ என்றோ அல்லது சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படுகிறது என்றோ அல்லது உற்பத்தி செய்யப்படும் நிறுவனத்தின் மீது ஒரு சட்டபூர்வ விசாரணை நிலுவையில் உள்ளது என்றோ காட்டினால் அந்த நிறுவனத்திடம் பொருள் வாங்குவதை அந்த நாடுகள் நிறுத்தி விடும். எனவே வெளிநாட்டிடம் பெரும் பணம் பெற்றுக் கொண்டு நம் நாட்டை காட்டி கொடுக்க இம்மாதிரி கல்வியை விற்கும் சிலர் போட்டியாளர்களோடு சேர்ந்து இம்மாதிரி வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள்.
2007-ல் வி.வி.மினரல் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் என இவர்களது ஏற்பாட்டில் வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டு ஜெர்மன் மற்றும் சில நாடுகளில் இருந்து நேரடியாக அலுவலர்கள் வந்து அனைத்து சுரங்க பணிகளையும் பார்வையிட்டார்கள். தொழிற்சாலைகளை பார்வையிட்டார்கள். பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பிறகு இந்த புகார் பொய் என்பதை அறிக்கை செய்தார்கள்.
அதன் அடுத்த தொடர்ச்சியாக எடுத்துள்ளது தான் இவர்களது இந்த முயற்சி. யார் வேண்டும் என்றாலும் பொதுநல வழக்கு போடலாம். என்ன குற்றச்சாட்டு வேண்டும் என்றாலும் கூறலாம். பொது நல வழக்கு என்றால் 500 ரூபாய் கட்டி தாக்கல் செய்தால் போதும். இதை வைத்து உலகம் முழுவதும் பத்திரிக்கைகள் வாயிலாக விளம்பரம் செய்யலாம்.
பொதுவாக உண்மையை மட்டும் விரைவில் தெரியப்படுத்தும் தங்கள்; பத்திரிக்கைகளில் விக்டர் ராஜமாணிக்கம் வழக்கிற்கு திரு.தயாதேவதாசிடம் எப்படி பேட்டி எடுத்தார்கள் என்பது விந்தையாக உள்ளது. அதனால் தான் மாநில அரசு மற்றும் வி.வி.மினரல் திரு. வைகுண்டராஜன் எதிர் மனு தாக்கல் செய்தும் கூட திரு.வைகுண்டராஜன் உட்பட இதர எதிர்மனுதாரர்களுக்கு நான்குவார காலம் அவகாசம் வழங்கினார் என உண்மைக்கு புறம்பான விசயத்தை தெரியப்படுத்தி உள்ளார்.
திரு.தயாதேவதாஸ்க்கும், வைகுண்டராஜனுக்கும் இடையே உள்ள பகை என்பது 1989-ல் இருந்து தொடர்கிறது. இது அனைவருக்குமே தெரியும். இந்த பேட்டியில் திரு.தயாதேவதாஸ் வந்ததன் மூலம் இந்த ரிட் மனுவும் அவரது ஏற்பாட்டில் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் வெளிச்சத்திற்கு வரும்.
திரு.தயாதேவதாஸ் தான் சட்டவிரோதமாக சுரங்க பணி செய்பவர். அவருக்கு வேலையே அவர் சட்ட விரோத பணி செய்து அடுத்தவர் மீது கவனத்தை திருப்புவது தான். இவர் தான் சட்டவிதிகளை எல்லாம் மீறுபவர். இந்தியாவிலேயே 2-வது மிகப் பெரிய இல்லீகல் மைனிங் செய்து கையும் மெய்யுமாக பிடிபட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டது இவர் மீது தான். இதற்கு உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.
எனவே தாங்கள் தயவு செய்து தங்கள் செய்தியாளர்களுக்கு சரியான செய்தியை நேர்மை தவறாமல் அறிக்கை செய்ய உரிய அறிவுரை வழங்குங்கள். தயவு செய்து எங்களது இந்த ஆட்சேபணையையும் தங்கள் பத்திரிக்கையில் பிரசுரியுங்கள்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ஆர். பாலகிருஷ்ணன்