Tag Archives: VV Titanium

ஸ்டெர்லைட் குறைபாடுகளை சரி செய்யாமல் திசை திருப்புவது நியாயமா?

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஆனால் விவி டைட்டானியத்திற்கு எதிராக என்று ஒரு வீடியோ பரப்ப விடப்பட்டது. நாங்கள் எந்த தொழிலுக்கு எதிரானவர்கள் அல்ல. எல்லா தொழிலும் வேண்டும். தொழில் வளர்ச்சி இல்லை என்றால் நாகரீக உலகத்தில் மனித சமுதாயம் வசதியாக வாழ முடியாது. சில தொழில்களில் சில நேரங்களில் மனித கவனத்தையும் மீறி சில தவறுகள், குறைபாடுகள் நிகழலாம். அவை சரி செய்யப்பட வேண்டும். மாறாக அந்த தொழிலே முழுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்பது எங்களுக்கு உடன்பாடு இல்லாதது. ஏனென்றால் இதே போல் அரசியல் காரணங்களால் தாது மணல் தொழில் நிறுத்தப்பட்டு சுமார் 50000 குடும்பங்கள் பல வருடங்களாக சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகிறோம். தற்போது விவி டைட்டானியத்தால் தான் சுற்றுச்சூழல் பாதிப்பு என ஒரு வீடியோ வெளியிடப் பட்டது. அதற்கான பகுப்பாய்வு அறிக்கைகளும் வெளியிடப் பட்டன. இதில் மிக கவனிக்க வேண்டியது ஏப்ரல் 21-ல் மாதிரி எடுத்து ஏப்ரல் 22-ல் ஆய்வு செய்து கொடுத்து ஏப்ரல் 28-ல் பகுப்பாய்வு அறிக்கை பெற்று அதனை ஜீன் 2-ல் அதாவது சுமார் ஒன்றேகால் மாதம் கழித்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதற்கு காரணம் அந்த பகுப்பாய்வு அறிக்கை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள்; அதாவது குரோமியம், காப்பர், ஈயம் முதலியவை அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதால் தான் அவற்றை வெளியிடாமல் காலம் தாழ்த்தினார்கள். தற்போது கைமீறி அந்த ஆலை மூடப்பட்டதால் அருகில் உள்ள நிறுவனத்தின் மீது அபாண்டமான பழியோடு வீடியோ வெளியாகி உள்ளது.

நாட்டில் நடக்கும் ஆற்று மணல் கொள்ளையை பொது மக்களும் மற்றவர்களும் தெரியாமல் இருப்பதற்காக செயற்கையாக தாது மணல் கொள்ளை என்ற பொய் புகாரை உருவாக்கி அந்த தொழிலை நிறுத்தி உள்ள நிலையில் அதே நிறுவனத்தை நோக்கி திருப்பி விட்டால் அது எதிர்ப்பை திசை திருப்பும் என நினைத்து யாரோ இந்த செய்தியை பரப்பி விட்டார்கள். தொழில் போட்டியினாலும் அந்நிய நிறுவன போட்டியினாலும் குடும்ப பகையினாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக தாது மணல் தொழில் இதனாலும் பாதிக்கப்படக் கூடாது. எனவே இது பற்றிய விபரங்களை ஆராய்ந்தோம். இந்திய உச்சநீதிமன்ற உத்தரவு படி 2011-ல் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகம் (NEERI) ஏற்கனவே ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்ததன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவும் பிறப்பித்துள்ளது. 2011-ல் பிறப்பிக்கப் பட்ட அந்த உத்தரவிலேயே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகளில் குரோமியம், காப்பர், ஈயம் போன்றவை அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக இருப்பதை உச்சநீதிமன்றமே 53-வது பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளது. டைட்டானியம் என்பது இல்மனைட் தாதுவில் இருந்து சல்பிரிக் ஆசிட்டை உபயோகித்து டைட்டானியத்தை பிரிப்பது. இதில் குரோமியம் காப்பர், ஈயம் போன்றவை வரவே செய்யாது. நண்பரின் வீடியோவில் ஈயம் போன்றவை கூடுதல் இருப்பது அவரது மாதிரி பகுப்பாய்விலேயே தெரிகிறது. எனவே இந்த கழிவிற்கு காரணம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியது போல் ஸ்டெர்லைட் நிறுவன கழிவு தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும். மேற்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை https://www.elaw.org/system/files/sterlite.v.india_.pdf இணைப்பில் பார்க்கலாம். தொடர்புடைய தீர்ப்பின் பக்கம் 53 கீழே கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பொய் புகாரால் பாதிக்கப் பட்ட ஒரு தொழிலுக்கு எதிராக திட்டமிட்டு திசை திருப்பும் நாடகம் நடப்பதால் இவற்றை பதியவும் வெளி கொணரவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை தயவு செய்து தவறுகளை திருத்துங்கள். உள்நோக்கத்தோடு ஏற்கனவே பாதிக்கப் பட்ட நிறுவனங்களை தாக்கி அழிக்க வேண்டும் என நினைக்காதீர்கள். இந்த தாது மணல் தொழில் இந்திய அரசுக்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் தொழில் என்பதையும் எந்த தவறுகளும் நடைபெற வில்லை என்பதையும் எங்களது இணைய தளத்திலும், http://www.beachminerals.org இணைய தளத்திலும் உள்ள பதிவுகளின் மூலம் பார்க்கலாம். அவற்றை பார்த்து எந்த சந்தேகம் என்றாலும் அதனை நிவர்த்தி செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் பிளஸ் டு முடிக்கிறார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பொறியாளர்கள், 3 லட்சம் பட்டதாரிகள், வெளிநாட்டில் படிக்கும் பட்டதாரிகள் ஒரு லட்சம் என உருவாகிறார்கள். எனவே ஆண்டுக்கு ஆண்டு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக பொய் புகார்களை கூறி தொழில்களை கெடுப்பதை எங்கள் தொழிலாளர் சமுதாயம் எந்த நிலையிலும் ஊக்குவிக்காது.