Hindu News is false

கடந்த ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தங்களது ‘தி இந்து’ தமிழ் நாளிதழில், ‘மர்மப் பிரதேசத்தில் பயணம்’, ‘வணக்கம் வைகுண்டராஜன்’, ‘எதை எ(கொ)டுத்துச் செல்கிறோம்’ என்ற தலைப்புகளில் வெளியான கட்டுரைகள் தொடர்பாக இந்த விளக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தக் கட்டுரைகள் தவறான சில தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.

மீனவக் கிராமத்தை ஒட்டி எந்தத் தனியார் நிறுவனமும் மணல் அள்ளவில்லை. கட்டுரையில் குறிப்பிடும் நீரோடி, மிடாலம் அனைத்தும் கன்னியாகுமரியில் ‘இண்டியன் ரேர் எர்த்’ நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்ட பகுதிகள். கடலில் மண் அகழ்வு நடத்துவது அந்த நிறுவனம்தான். நவீன ரக இயந்திரங்களைக் கொண்டு, கடற்கரையில் மணல் அள்ளுகிறார்கள். அதனை இந்திய அரசும் அனுமதித்துள்ளது.

கடல் அரிப்பு என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு முக்கியமான பிரச்சினை. அதற்கு வெவ்வேறு இயற்கைக் காரணங்கள் உள்ளன. இவ்வாறிருக்க, ‘கடலையும் கடற்கரையையும், கனிம மணல் நிறுவனங்கள் சூறையாடுகின்றன’ என்ற கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருப்பது வருந்தத் தக்கது.

கனிம மணலில் மோனோசைட் என்னும் கனிமம் மட்டுமே கதிரியக்கம் கொண்டது. அதன் அளவு கிழக்குக் கடற்கரையில் மிகமிகக் குறைவு. கடற்கரையில் இயற்கையாக ஒதுங்கும் இந்தக் கனிம மணலை எடுப்பதற்கும், கடலினுள் வாழும் மீன்வளம் பாதிப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

மேலும், கனிம மணல் பிரிக்கப்படுவது மின்காந்த முறையில். அதற்குத் தண்ணீர் எதுவும் தேவையில்லை. எனவே, எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை கழிவுநீரை வெளியேற்றுவது என்ற பிரச்சினையே எழாது.

‘கடலும் ஊரும் ஆலைகளின் கைக்குள் இருக்கின்றன’ என்று தாங்கள் கூறியுள்ளீர்கள். அந்நிறுவனங்களின் மூலம் ஊரிலுள்ள மக்கள் வேலைவாய்ப்பு பெறும்போது, உள்ளபடியே அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் அந்த ஊர் இருக்கும். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

குறிப்பிட்ட காரணத்துக்காக மீனவ சமுதாய மக்களிலேயே ஒருசிலர் எதிர்க்கலாம். ஆளுங்கட்சியை எதிர்த்து அறிக்கை கொடுத்தால்தான் எதிர்க்கட்சி இருப்பது தெரியும் என்று சில கட்சிகள் நினைப்பதுபோல், கிராமத்திலுள்ள பெரும்பான்மையினரும் முக்கியஸ்தர்களும் இந்தத் தொழிலுக்கு ஆதரவாக இருந்தால், அதை எதிர்க்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக்கொண்டு சிலர் செயல்படுகிறார்கள்.

அதுவும் போக திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, தோமையாபுரம், பரதர் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை ஆகிய 9 மீனவ கிராமங்களே உள்ளன. கதிரியக்கம் அதிகமுள்ள மணவாளக் குறிச்சி பகுதியில், 2,700 மீனவர்கள்தான் கடந்த 25 ஆண்டுகளாக மணல் அள்ளிக் கொடுக்கிறார்கள். இதில் அவர்களோ அவரது வாரிசுகளோ பாதிக்கப்படவில்லை.

மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப அரசின் கொள்கைகள் மாறுகின்றன. இதில் உரிய உரிமம் பெற்றுத் தொழில் செய்பவர்களை தாங்கள் எந்த ஆதாரமும் இன்றித் தாக்குவது பத்திரிகை தர்மம் அல்ல.

குறிப்பாக, ‘வணக்கம் வைகுண்டராஜன்’ என்று தலைப்பிட்டு எழுதியிருப்பதும் பத்திரிகை தர்மத்துக்கு விரோதமானது.

– சஜி ஜோசப், மைனிங் இன்ஜினீயர், வி.வி.மினரல்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *