ஒரு நாட்டில் தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் சைக்கிளின் இரு டயர்கள் போன்றது. இரு டயர்களுமே சமவிகிதத்தில் காற்று அடிக்கப்பட்டு பழுதில்லாமல் இருந்தால்தான் சைக்கிளை ஓட்டிச் செல்லமுடியும். ஏதாவது ஒருபக்க டயர் பஞ்சர் ஆகிவிட்டால், ஸ்டாண்டு போட்டு நிறுத்துவதைத்தவிர வேறு வழியில்லை. அதுபோலத்தான் நாடு முன்னேற்ற பாதையில் செல்லவேண்டுமானால், தொழிலும், விவசாயமும் சமவிகிதத்தில் வளர்ச்சி பெற்றுக்கொண்டே செல்லவேண்டும்.
தொழில் வளர்ச்சியைப் பொருத்தமட்டில், ஒரு ஊரில் ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டால், அந்த தொழிற்சாலையின் உற்பத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஓரளவுக்காவது துணைபுரியும். அந்த தொழிற்சாலை மூலம் சிலர் வேலைவாய்ப்பு பெறமுடியும். அந்த தொழிற்சாலைக்கு பொருட்கள், சேவைகள் சப்ளை செய்யும் உபதொழில்களும் வளரும். அதன்மூலமும் பலர் வேலைவாய்ப்பு பெறமுடியும். அந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் புதிய கடைகள் உருவாகும், வீடுகள் வரும், போக்குவரத்து வசதிகள் ஏற்படும், அதனால்தான் எல்லா ஊர்களிலும் தங்கள் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும் என்பது மக்களின் தணியாத ஆசையாகும்.
புதிது புதிதாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற நிலையில், ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டால், அங்குள்ள இதுபோன்ற வசதிகளுக்கும் மூடுவிழா நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்ற வகையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துவிடுவார்கள். இதே நிலைதான் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் ஹார்வி மில்கள் மூடப்பட்டபோது மக்களுக்கு ஏற்பட்டது. சென்னையில் பின்னி மில்ல், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் பாதிப்புகளும், கோவை, திருப்பூர் பகுதிகளில் மில்கள் மூடப்பட்டபோதும் ஏற்பட்ட காயங்களின் வடுக்கள் மக்களிடம் இன்னும் மாறவில்லை.
புதிய தொழிற்சாலைகள் தொடங்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்போது சில தொழிற்சாலைகள் மூடப்படுவது பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கே பெருமை அளித்துக்கொண்டிருந்தது நோக்கியா செல்போன் தொழிற்சாலை. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த தொழிற்சாலை ஒரு வெளிநாட்டு கம்பெனியாகும். 2006–ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ஒரு கோடியே 40 லட்சம் செல்போன்கள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
இங்கு தயாரிக்கப்பட்ட செல்போன்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கடும் கிராக்கி இருந்தது. இந்த சூழ்நிலையில், 2013–ம் ஆண்டு வருமான வரித்துறை ரூ.3,500 கோடி கட்ட அனுப்பிய நோட்டீசு, தொடர்ந்து தமிழக அரசின் வணிக வரித்துறை ரூ.2,400 கோடிக்கு அனுப்பிய நோட்டீசால் வழக்கு தொடர்ந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியா நிறுவனத்தை வாங்கியும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த தொழிற்சாலையை வாங்க முடியாத நிலையில், இந்த தொழிற்சாலையை காண்டிராக்ட் உற்பத்தியாளர்கள் என்று போட்டுள்ள ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டது.
எனவே, வருகிற நவம்பர் மாதம் 1–ந் தேதி முதல் உற்பத்தியை நிறுத்திவிடப்போவதாக அறிவித்துவிட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்ட நிலையில், இன்னும் மிச்சம் மீதி உள்ளவர்களும் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது. இதுபோல, கடந்த 50 ஆண்டுகளாக கைக்கடிகார உற்பத்தியில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த
பெங்களூர் எச்.எம்.டி. நிறுவனம் மூடப்படப்போகிறது.
மேலும் நாப்தாவை மூலப்பொருளாக வைத்து யூரியா தயாரிக்கும் தொழிலுக்கு கொடுக்கப்பட்ட மானியத்தை மத்திய அரசாங்கம் நிறுத்திவிட்டதால், சென்னை உரத்தொழிற்சாலை, மங்களூர் உரத்தொழிற்சாலை, ஸ்பிக் நிறுவனம் தங்களுடைய யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளை மூடிவிட்டன. பொதுவாக தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையைத்தடுக்க, மத்திய–மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுபோன்ற தொழிற்சாலைகள் மூடப்படுவதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது, வேறு எங்கும் வேலைவாய்ப்புகளை எளிதாக பெறும் வகையில் தொழிலாளர்களும் பலதரப்பட்ட திறன்களை தங்களிடம் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு எடுத்துக்காட்டு யாகூ நிறுவனத்தில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மற்ற நிறுவனங்கள் போட்டிப்போட்டு வேலைவாய்ப்பு அளித்ததுதான்.
Source : http://www.dailythanthi.com/Thalayangam