முற்பகல் செய்யின் பிற்பகல் வரும்

தனியார் தாது மணல் தொழிலை கெடுப்பதற்கு இந்திய அருமணல் ஆலையில் வேலை பார்க்கும் லீகல் ராமகிருஷ்ணன் என்பவர் உயர் அதிகாரிகளிடம் தவறான தகவல் கூறி மத்திய அரசு வழக்கறிஞருக்கு உதவி செய்ய நீதிமன்றம் செல்வதாக அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வாதாடும் அமிக்கஸ் கியூரிக்கு ஆதரவாக செயல்பட்டார். பல்வேறு தொழிலாளர்கள் இது பற்றி அணுசக்தி துறை பாரத பிரதமர் உட்பட அனைவருக்கும் மனு அனுப்பியும் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களது கெடு செயலுக்கு தற்போது கடவுளே மீனவர்கள் உருவத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்து விட்டார். மற்றவர்கள் தொழிலை கெடுத்து நாம் மட்டும் ஏகபோகமாக கொழிக்கலாம் என நினைத்த இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு இந்த தண்டனை தேவை தான்.

*******************

குமரி கடற்கரைகளில் தாது மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் – கலெக்டரிடம் மீனவர்கள் மனு
குமரி மாவட்ட கடற்கரைகளில் தாது மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவி தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நலஉதவி தொகை, முதியோர் உதவி தொகை, விதவை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 284 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அவற்றை வாங்கிய கலெக்டர் பிரசாந்த் வடநேரே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி எஸ்.கிறிஸ்டோபர் ஜெயராஜ் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கத்தோலிக்க திருச்சபையின் கோட்டார் மறை மாவட்டத்துக்கு உட்பட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் அதன் இயக்குனர் அருட்பணியாளர் ஸ்டீபன் தலைமையில் அருட்பணியாளர்கள், மீனவர்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் 43 கடற்கரை பங்குகள் உள்ளன. இந்த கடற்கரை பங்குகளில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனத்தின் சார்பில் கடற்கரைகளில் கனிம (தாது) மணல் எடுப்பதால் கடல் அரிப்பு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைவதோடு, பல வீடுகள் கடலால் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே கனிம மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை பங்கு பேரவை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வருகிற காலங்களில் மக்களின் குடியிருப்புகளை காக்கவும், புற்று நோயில் இருந்து விடுபட வேண்டிய நல் எண்ணத்தோடு இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக குமரி மாவட்டத்தில் இந்திய அரிய வகை மணல் ஆலை மூலம் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source : https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/10/09031354/The-ban-on-oak-sand-on-the-Kumari-shores–fishermen.vpf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *