மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமையா மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த
நீதிபதி மகாதேவன், இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். கடந்த நவம்பர் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இறக்குமதி செய்துள்ள மணல் தமிழக அரசின் கனிம வள சட்டப்படி, தொழிலக பயன்பாட்டிற்கான மணல் (தாதுமணல்) என்ற வரையறைக்குள் வருவதாலும், தாதுமணல் இறக்குமதி செய்வதற்கான உரிமம், விற்பனைக்கு கொண்டு செல்வற்கான போக்குவரத்து அனுமதி சீட்டு பெறாததால் விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் என தெரிவித்தனர்.
அத்துடன், அரசு சார்பில் கலெக்டர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.