அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ.எல். (இந்தியா) நிறுவனம், மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாகும். இது 1965 முதல் இங்கு இயங்கி வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடற்கரைப் பகுதிகளில் அரியவகை கனிமங்களை உள்ளடக்கிய தாதுமணல் பெருமளவில் காணப்படுகிறது. இந்நிறுவனம் இந்த தாது மணலை சேகரித்து அதிலிருந்து அரியவகை கனிமங்களான மோனசைட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், கார்னெட் ஆகியவற்றை பிரித்தெடுக்கிறது.
இங்கு தாதுமணல் சேகரிக்கும் பணியானது சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறுகிறது. மேலும் தாதுமணல் எடுக்கப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கப்படுகின்றன.
இம்மாவட்ட கடற்பகுதியில் மோனசைட் என்ற கனிமம் இருப்பதால் இயற்கையாகவே கதிர்வீச்சு அதிகமாக உள்ளது.
மோனசைட் என்பது தோரியம், யுரேனியம் மற்றும் அரிய உலோகங்கள் அடங்கிய கனிமம்.
இப்பகுதியில் தாது மணலை எடுப்பதன் மூலமாக இயற்கையாக உள்ள கதிர் வீச்சானது 6 முதல் 10 மடங்குவரை குறைக்கப்படுகிறது.
இங்கு பிரித்தெடுக்கப்படும் அரியவகை கனிமங்கள், கணினி, செல்லிடப்பேசி, மின்னணு சாதனங்கள், விமான பாகங்கள், மருத்துவ சாதனங்கள், பெயின்ட், செராமிக்ஸ், டைல்ஸ், காகிதம், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் மூலப்பொருள்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக எரிசக்தி துறையில் அரிய கனிமங்கள் இன்றியமையாத மூலப் பொருள்களாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
இதன்மூலம் நம்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய செலாவணியை பெருமளவில் இந்நிறுவனம் ஈட்டித் தருகிறது.
-ந.வேலாயுதன்பிள்ளை