தமிழ்நாட்டையும் ஆந்திர மாநிலத்தையும் நீர்வழிப்பாதையில் இணைக்கும் வகையில் விரைவில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்கப்படும். இதற்காக சோழிங்கநல்லூர், மாமல்லபுரத்தில் விரைவில் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படுகின்றன.
நீர் வழிப்போக்குவரத்து
நம் நாட்டில் விமானம், ரெயில், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் சாலைவழிப் போக்குவரத்துக்கு 1 கிலோ மீட்டருக்கு ரூ.2 செலவாகிறது. ரெயில் போக்குவரத்துக்கு ரூ.1.50 செலவாகிறது.
ஆனால் நீர்வழிப்போக்குவரத்துக்கு வெறும் 40 காசு மட்டுமே செலவு ஆகிறது. எனவே நீர்வழிப்போக்குவரத்தை அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி நடந்த ஆய்வில் நாடு முழுவதும் 58 நீர்வழிப்போக்குவரத்து பாதை திட்டங்கள் கண்டறியப்பட்டன. அதில் தமிழகத்தில் 8 திட்டங்கள் உள்ளன.
இதில் ஆந்திராவையும் தமிழகத்தையும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் திட்டத்தை வரும் டிசம்பர் மாதம் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேசிய உள்நாட்டு நீர்வழித்தட ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-
பக்கிங்காம் கால்வாய்
ஆங்கிலேயர் ஆட்சியில் கவர்னராக இருந்த பக்கிங்காம் என்பவர் காலத்தில் சரக்கு போக்குவரத்துக்காக 1806-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள மரக்காணம் வரை 418 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.30 லட்சம் செலவில் கால்வாய் வெட்டப்பட்டது. இதனால் அவருடைய பெயராலே ‘பக்கிங்காம் கால்வாய்’ என அழைக்கப்படுகிறது.
இந்த கால்வாய் வழியாக கடந்த 1950-ம் ஆண்டு வரை சரக்கு போக்குவரத்து நடந்துள்ளது. ரெயில் போக்குவரத்து அதிகரிக்க தொடங்கிய பின்னர், இந்த கால்வாய் போக்குவரத்து படிப்படியாக குறைந்து விட்டது.
போக்குவரத்து முனையம்
பக்கிங்காம் கால்வாய் சென்னையில் 3 பிரிவுகளாக பிரிந்து ஓடுகிறது. வடக்கு பக்கிங்காம் கால்வாய் சென்னை மாநகர பகுதியில் 17 கிலோ மீட்டர் தூரமும், மத்திய பக்கிங்காம் கால்வாய் 7 கிலோ மீட்டர் தூரமும், தெற்கு பக்கிங்காம் கால்வாய் 24 கிலோ மீட்டர் தூரமும் ஆக மொத்தம் 48 கிலோ மீட்டர் தூரம் இந்த கால்வாய் சென்னை மாநகராட்சி பகுதியில் ஓடுகிறது.
தமிழ்நாடு – புதுச்சேரி இடையே தெற்கு பக்கிங்காம் கால்வாயில், சோழிங்கநல்லூர்- கல்பாக்கம் இடையே முதல் கட்டமும், கல்பாக்கம்- புதுச்சேரி இடையே 2-வது கட்டமாகவும பணி நடக்க உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் மாமல்லபுரத்தில் சரக்கு போக்குவரத்து முனையமும் அமைக்கப்படுகிறது.
300 டன் எடை
இதற்காக கால்வாய் 36 மீட்டர் அகலத்திற்கும் 2 மீட்டர் ஆழத்திற்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. தற்போது இந்தகால்வாயை கடந்து செல்லும் சாலைபோக்குவரத்துக் கான பாலங்கள் மிகவும் தாழ்வாக இருப்பதால், கப்பல்கள் வந்து செல்லும் வகையில், குறைந்தபட்சம் 5 மீட்டர் உயரத்துக்கு உயர்த்தப்பட உள்ளன.
தேவைப்படும் இடங்களில் புதிய பாலம் கட்டுவதற் கான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 2 ஆண்டுகளில் இந்தப்பணியை முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பணி முடிவடைந்த உடன் ஆந்திர மாநிலம் வாசிராபாத்தில் இருந்து, பொல்லாவரம், காக்கிநாடா, விஜயவாடா, மசூலிப்பட்டினம், ஓங்கோல், நெல்லூர், பழவேற்காடு மற்றும் தமிழகத்தில் உள்ள திருவான்மியூர், திருப்போரூர், மாமல்லபுரம், மரக்காணம் வரை 300 டன் எடை கொண்ட சரக்குகளை படகுகளின் மூலம் இந்தகால்வாய் வழியாக எடுத்து செல்ல முடியும்.
சென்னை- மாமல்லபுரம் இடையே சுற்றுலா மற்றும் பயணிகள் படகுகளும் இயக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை எளிதாகவும், குறைந்த செலவிலும் எடுத்து செல்ல முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Courtesy : http://www.dailythanthi.com/News/State/2015/07/19001825/Buckingham-canal-boat-traffic-soon.vpf