இந்தியாவின் வேலை வாய்ப்பில் சுமார் 23 சதவீதம் சுரங்க தொழில் மூலம் கிடைக்கிறது. நீர், காற்று, உண்ணும் உணவு மரம் மற்றும் மரத்தால் ஆன பொருட்கள் தவிர அனைத்தும் சுரங்கம் செய்யப்படும் கனிமங்களில் இருந்தே தயாரிக்கப் படுகிறது. இதுவே சுரங்க தொழில் மற்றும் கனிமங்கள் மனித வாழ்க்கைக்கு எவ்வளவு அத்தியாவசியம் என்பதை நிரூபிக்கும். மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சி தான் கனிம தொழில் விரிவடைவதற்கு காரணம். அரசுக்கு ஏராளமான வருவாயையும், அன்னிய செலவாணியையும், இந்தியாவில் வேலை வாய்ப்பையும் ஏராளமான தொழிலுக்கு மூலப்பொருளையும் சப்ளை செய்யும் கனிம தொழில் கடந்த சில வருடங்களாகவே தவறான கொள்கையால் பாதிக்கப் பட்டு வருகிறது. இதனை பலமுறை நாம் பதிவு செய்துள்ளோம். தற்போது கற்று உணர்ந்த அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் இதனை உறுதி செய்துள்ளார்கள். முன்பு கடைபிடிக்கப் பட்ட நடைமுறைக்கும், தற்போது ஏல நடைமுறை என அரசு சட்டத்தை மாற்றியதற்கும் இடையில்; உள்ள வேறுபாடுகளை இந்த கருத்தரங்கு ஆராய்ந்தது.
ஏலம் மூலம் சுரங்க குத்தகை வழங்கப் படும் என 2015-ல் சட்ட திருத்தம் கொண்டு வந்த பிறகு கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா முழுவதும் சேர்ந்து 103 சுரங்க குத்தகைகள் மட்டுமே ஏலம் விடப் பட்டுள்ளது என்ற விபரத்தை இந்த கருத்தரங்கு வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளது.
ஆனால் 2006 முதல் 2010 வரை மட்டும் 2675 குத்தகைகளும்; 2010-2014 வரை 494 குத்தகைளும், அதே நேரம் 2015-2021 வரை வெறும் 28 சுரங்க குத்தகைகள் மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது.
மத்திய அரசின் கொள்கையை பின்பற்றி சிறு கனிமங்களுக்கும் ஏலம் என்ற நடைமுறையை துரதிஷ்டவசமாக கர்னாடகா அரசும் பின்பற்றியது. 2016 முதல் நாளது தேதி வரை ஒரு சிறு கனிம உரிமமும் வழங்கப் படவில்லை. அப்படியானால் வீடு கட்டுபவர்களுக்கு கல்லும் மணலும் எங்கு இருந்து வருகிறது. அரசுக்கு வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக எடுக்கப் படுகிறது. இது தான் அரசின் புதிய சுரங்க கொள்கையின் வெளிப்பாடு.
2017-18-ல் இருந்தே இந்தியாவின் கனிம உற்பத்தி குறைந்து வருகிறது. விளைவு இந்திய தொழில்களுக்கு மூலப் பொருட்கள் இந்தியாவில் இருந்தாலும் கூட அன்னிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரசுக்கு அன்னிய செலவாணி இழப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணி.
பொருளாதார வளர்ச்சிக்கு கனிமங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஏராளமான நாடுகள் சுரங்க குத்தகைக்கு ஏல முறையை அறிமுகப் படுத்தவில்லை. உலகில் உள்ள நாடுகளில் இந்தியா உட்பட ஏழு நாடுகள் மட்டுமே இந்த ஏல முறையை கடைபிடிக்கின்றன. ஒரு சுரங்க குத்தகை வழங்கப் பட்டால் குறைந்த பட்சம் 100 நபர்கள் நேரடியாகவும் 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். அப்படியானால் எத்தனை நபர்களின் வேலை வாய்ப்பு அரசின் தவறான கொள்கையால் பாதிக்கப் பட்டு உள்ளது என்பதை இதன் மூலம் தெரியலாம்.
நாம் கண்கூடாக தெரிவதற்கு ஒரு சிறு உதாரணம். உலக தாதுமணல் இருப்பில் 3-ல் ஒரு பங்கை தன்னகத்தே கொண்டு உள்ள இந்தியா சில தவறான நபர்களின் வழிகாட்டுதலால் தாதுமணல் சுரங்க பணியை நிறுத்தி விட்டு தற்போது இந்தியாவில் உள்ள டைட்டானியம் உற்பத்தியாளர்களும் தங்கள் மூலப் பொருளுக்கு அந்நிய தேசத்தை சார்ந்து இருக்கும் நிலை உள்ளது. இவ்வாறு இந்திய தொழிலை முடக்கி அன்னிய தொழிலை ஊக்குவிக்க அன்னிய சக்திகளின் ஊடுறுவல் எல்லா மட்டத்திலும் உள்ளது என்பதை முதன் முதலில் வெளி கொணர்ந்தது நமது சங்கமே.