700 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் அனுமதியின்றியும் கடலோர மேலாண்மை விதி அனுமதியின்றியும் சுரங்க பணி நடைபெறுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் இவ்வாறு உரிய அனுமதிகள் இன்றி சுரங்க பணி மேற்கொண்டது தான் 2004-ல் ஏற்பட்ட சுனாமியில் குளச்சல் கிராமத்தில் சுமார் 400 நபர்களுக்கு மேல் மரணம் அடைவதற்கு ஒரு காரணம் என்றும் சுற்றுச்சூழல் அனுமதியோடு இயங்கிய தனியார் நிறுவன சுரங்க குத்தகை உள்ள கிராமங்களில் ஒரு உயிர் சேதம் கூட சுனாமியில் ஏற்படவில்லை என்றும் பொது மக்களிடையே ஒரு பேச்சு உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி சுரங்க பணி நடைபெற அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்ததாக தெரிய வருகிறது. ஆனால் அந்த விபரங்களை மறைத்து 700 தொழிலாளர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 3 மாதங்களுக்குள் இவர்களால் உத்தரவு பெற முடிகிறது. அரசு வழக்கறிஞர் மற்றும் அரசு தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு படி தான் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் பெர்மிட் வழங்கப்படவில்லை என்றோ அந்த நிறுவனத்தின் சுரங்க குத்தகை ஏற்கனவே காலாவதியாகி விட்டது என்றோ அவர்கள் குத்தகை பகுதி என்று தனியாரின் நிலத்தில் அரசு நிறுவனம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக குவாரி செய்கிறார்கள் என்றோ, எல்கை கற்கள் எதுவும் நட்டு பராமரிக்கப்படவில்லை என்றோ உயர்நீதிமன்றத்திலோ எதிர் உரையிலோ கூறவில்லை.
ஆனால் எல்லா அனுமதிகளும் உள்ள சுமார் 30000 தொழிலாளர்கள் பாதிக்கப்படும் தனியார் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவு பெற முடியவில்லை. இந்தியாவின் நீதித்துறையின் நிலைப்பாடு ஆச்சரியமாக உள்ளது.